கொங்குநாடு சர்ச்சை… டிவிட்டரில் டிரெண்டாகும் #DmkFearsKongunadu : பீதியில் திமுக!!

11 July 2021, 3:31 pm
DMK Fear 1 - Updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் புதிய வழக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சட்டப்பேரவையில் இது தொடர்பாக பாஜக எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசு என அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், இனி அவ்வாறுதான் அழைக்கப்போவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால், திமுக மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் அடிக்கடி நடந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம்பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட எல்.முருகனின் சுயவிபரப் பக்கத்தில், எல். முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்தின் ஒரு பகுதியை கொங்குநாடு என மத்திய அரசே குறிப்பிட்டிருந்ததால், தமிழகத்தை பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா..? என்ற விவாதம் எழுந்தது. ஒருவேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளும் மாநிலத்தின் எல்லைப் பரப்பு சுருங்கிவிடும். மாநிலங்களை நிர்வாகக் காரணம் காட்டி பிரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதால், ஒன்றிய அரசு எனக் கூறி வந்த ஆளும் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கவே கொங்குநாடு என மத்திய அரசு குறிப்பிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தாலும், மத்திய அரசின் இந்த அணுகுமுறை அதிரடியாக இருப்பதாக பாஜகவினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கொங்குநாடு என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிவிட்டரில் டிரெண்டு செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று #DmkFearsKongunadu என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்கப்படும் என்ற சர்ச்சைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சை திமுக மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

Views: - 165

0

0