மருத்துவமனையை அற்பணித்த மனிதநேயர்.! உள்ளம் கவர்ந்த மருத்துவர்.!!(வீடியோ)

2 May 2020, 6:22 pm
Krishnagiri Free Hospital - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பல்வேறு ஏழை எளிய குடும்பங்கள் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் அந்தந்தப் பகுதிகளுக்கு சென்ற சமூக ஆர்வலர் மருத்துவ ஆலோசனையும் இலவச மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள அத்திமுகம் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் அமானுல்லா அப்பகுதியில் ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் பிஏ பார்மசி படித்துவிட்டு தனது இளம் வயதில் பெங்களூரில் பணியாற்றி வந்தார்.

ஜமீன் வாரிசு என்பதாலோ என்னவோ அமானுல்லா அவர்களுக்கு தன்னிடம் இருக்கும் பொருளாதாரத்தை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்க, கடந்த பத்தாண்டுகளுக்கு முன் அவர் பிறந்து வளர்ந்த ஊரான அத்திமுகம் பகுதியில் சிறிய அளவில் கிளினிக் ஒன்றை தொடங்கி அங்கு மருத்துவர்களை அழைத்து வந்து இலவசமாக மருத்துவ சேவை அளிக்கத் தொடங்கினார்.

இவரது இந்த சேவையை அறிந்த அப்பகுதி மக்கள் மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலம் குப்பம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் போன்ற பகுதிகளிலிருந்தும் மருத்துவ தேவைக்காக ஏராளமான நோயாளிகள் வரத் தொடங்கினர் இதனால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த கிளினிக் தற்பொழுது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உருவாகியுள்ளது.

முதலில் காய்ச்சல் சளி போன்ற சிறிய அளவிலான உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் நோயாளிகளின் வசதிக்கேற்ப இங்கு ரத்தக்கொதிப்பு. சர்க்கரை நோய். இதய கோளாறு. உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மேலும் எலும்பு முறிவு, கை கால் புன், கண் மற்றும் பற்களுக்கான சிகிச்சைகளும் மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சைகளை வழங்கி வழங்கிவரும் அமானுல்லா கண்புரை. கேன்சர். குடல் நோய். எலும்பு முறிவு போன்றவற்றால் பாதிக்கப் பட்ட 1200க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்துச்சன்று இலவச அறுவை சிகிச்சையும் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தனது மருத்துவமனையை முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட கொரானா நோய் சிகிச்சை பிரிவுக்காக வழங்கியுள்ள அமானுல்லா மருத்துவமனைக்கு சொந்தமான 3 இலவச ஆம்புலன்ஸ் சேவைகளையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தன்னிடம் வரக்கூடிய பல ஆயிரம் ஏழை எளிய நோயாளிகள் மாதாந்திர சிகிச்சைக்காகவும் மருத்துவர் ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகளை பெறமுடியாமல் தவித்து வந்ததை உணர்ந்த சமூக சேவகர் அமானுல்லா அவர்கள் தனது நோயாளிகளின் துயர் தீர்க்க மருத்துவ குழுவுடன் நோயாளிகளில் வீடுகளுக்கு பயணிக்கத் தொடங்கினார். கடந்த 15 தினங்களுக்கு மேலாக தனது காரில் மருத்துவ குழுவை அழைத்துக்கண்டு நோயாளிகளை இருப்பிடத்திற்கே சென்று அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அவர் கிட்டத்தட்ட 150 கிராமங்களை இதுவரை சென்றடைந்துள்ளார். 8000 நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகளை இருப்பிடம் சென்று வழங்கி வருகிறார்.

கொரானா நோய் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறிதும் சுயநலம் பாராமல் அச்சம் கொள்ளாமலும் மருத்துவர்களை அழைத்துக்கண்டு  நோயாளிகளின் உள்ளங்களுக்கு செல்லும் அமானுல்லா அவர்களை எங்கு சென்றாலும் பொதுமக்கள் ஆரத்தழுவி வரவேற்பது நெகிழ வைக்கிறது. அனைவரிடமும் மிக இயல்பாக உற்றார் உறவினர் போல பழகி அவர்களது உடல்நிலையை கேட்டறந்து தனக்கே உரித்தான புன்னகையுடன் அனைவருக்கும் இலவச மருந்து மாத்திரைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கிவரும் சமூக சேவகர் அமானுல்லா மற்றும் அவரது மருத்துவ குழுவிற்கு பொதுமக்கள் பெரும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

சமூக சேவகர் அமானுல்லா அவர்களுக்கு இந்த சேவை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும் அவரது இந்த செயல் மூலம் மருத்துவ சேவை என்பது கருணையின் மறு உருவம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதையே உணர்த்தியுள்ளது.