விதவை பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் : போக்சோ வழக்கில் வாலிபர் கைது

Author: Babu Lakshmanan
22 November 2021, 10:49 am
Quick Share

கன்னியாகுமரி : குமரியில் விதவை பெண்ணிற்கு தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த மாதம் அடையாளம் தெரியாத ஒருவர் தனது செல்போன் மூலம் ஆபாச படங்களையும், ஆபாச வார்த்தைகளையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், அந்தப் பெண்ணுக்கு இன்னொரு செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து, இதே போல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணனை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், ரீத்தாபுரம் ஈத்தம்பாடு பகுதியை சேர்ந்த சதீஷ் (27) என்ற வாலிபர் தான் 2 செல்போன்கள் மூலம் இது போன்ற ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

சதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து, குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் சதீஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே இந்த விதவைப் பெண்ணிடம் தவறாக பேசியது தொடர்பாக போலீசாரால் கண்டிக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 478

0

0