கும்பகோணத்தில் தயாராகும் பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை : டெல்லி ராணுவ போர் நினைவிடத்தில் வைக்க ஏற்பாடு

Author: Babu Lakshmanan
20 January 2022, 6:23 pm
bibin rawat - updatenews360
Quick Share

கும்பகோணம் : குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் வெலிங்கடன் ராணுவ பயிற்சிபள்ளியில் பயிற்சி பெற்றுவரும் அலுவலர்களிடையே உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், இலக்கை அடைய 10 நிமிடம் இருந்த நிலையில் அவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் மற்றும் அதில் பயணம் செய்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்தியாவில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக முதன்முறையாக கடந்த 2019 இல் நியமிக்கப்பட்ட பிபின் ராவத் தன்னுடைய பணிக்காலத்தில் திறம்பட செயல் புரிந்தவர். இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், இந்தியா முழுவதும் பிபின் ராவத் மறைவிற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலை தயாரித்து அதனை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் ஐம்பொன்னினால் ஆன பிபின் ராவத் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டமாக களிமண்ணில் அவரது உருவம் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈய்யம் ஆகிய உலோகங்கள் அடங்கிய ஐம்பொன்களை காய்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் களிமண் சிலை மீது ஊற்றி முழு உருவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிலையை தயார் செய்ய ஏற்பாடு செய்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இறுதி வடிவம் பெற்று வரும் பிபின் ராவத் சிலையை நேரில் பார்வையிட்டு சில நிறை குறைகளை ஸ்தபதிகளிடம் தெரிவித்து சீர் செய்து கொள்ளுமாறு கூறினர்.

Views: - 349

0

0