மழலைகளின் ஈகை பண்பு : முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பை கொடுத்த சிறார்கள்…!!!

15 May 2021, 6:12 pm
kumbakonam - updatenews360
Quick Share

கும்பகோணம் : கும்பகோணத்தில் கோவில் குருக்களின் பிள்ளைகள், தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிதிக்காக கோட்டாட்சியரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், ஆக்ஸிசன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிர் இறந்து வரும் சம்பவம் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனா நிவாரணநிதி கோரிக்கை அறிந்து, சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், சினிமா நடிகர் நடிகைகள் என பலரும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் ஆகியோருடன் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கினர். மேலும் அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஒருநாள் சம்பளத்தை கொரோனா நிதி உதவிக்கு வழங்கி வருகின்றனர்.

இதையறிந்த கோவில் குருக்கள் மகன் மற்றும் மகள் ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோனா நிதி உதவிக்கு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் கோவிலில் பூஜை செய்யும் குருக்கள் ஆவார். இவருக்கு 4ம் வகுப்பு படித்து வரும் சர்வேஷ் (வயது 9) என்ற மகனும், 2ம் வகுப்பு படித்து வரும் சாக்ஷிதா (6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறனர். இவர்களது தந்தை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்லும் பொழுது தின்பண்டங்கள் வாங்க பணம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவர்கள் அந்த பணத்தில் எந்த தின்பண்டங்களும் வாங்கி சாப்பிடாமலும், விரைய செலவு செய்யாமலும் தினமும் உண்டியலில் சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா நோயால் தினமும் ஏரளமானவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதையும், பலர் இறந்து வருவதையும் அறிந்துள்ளனர். பின்னர் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி கோரிக்கையை அறிந்து அவர்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொடுக்க முன் வந்தனர். இது குறித்து தங்களது தந்தை ஓம்பிரகாஷிடம் கூறியுள்ளனர். குழந்தைகளின் இந்த செயலை கண்டு தந்தை நெகிழ்ந்து போனார்.

பின்னர் குழந்தைகள் சேர்த்து வைத்த உண்டியலை எடுத்து கோட்டாட்சியர் விஜயனிடம் கொடுத்தனர். அங்கு குழந்தைகள் சேர்ந்து வைக்கப்பட்ட 2 உண்டியலும் திறக்கப்பட்டதில், ஆயிரத்து 942 ரூபாய் இருந்துள்ளது. சிறுவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியதை கோட்டாட்சியர் விஜயன் பாராட்டினார்.

Views: - 112

0

0