6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி : கிடா வெட்டி பூஜை செய்த விவசாயிகள்!

17 January 2021, 5:40 pm
Farmers Happy - Updatenews360
Quick Share

தருமபுரி : அரூர் அருகே 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பிய மகிழ்ச்சியில் ஆடு வெட்டிய விவசாயிகள் சிறப்பு பூஜை செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தொட்டம்பட்டி நம்பிபட்டி கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைலன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் தேக்கபடுவதன் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கும் தேவையான நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அரூர் பெரிய ஏரிக்கு செல்கிறது.

இந்த ஏரிக்கு நீர்வரத்து பாசன கால்வாய், கல்லாறு, வாணியாறு இணையும், காரை ஒட்டு பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் ஏரி வறண்டு கிடந்தது.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்ததால், வாணியாறு அணை நிரம்பியதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக அரூர் பெரிய ஏரி, மைலன் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று மையிலன் ஏரி முழுவதும் நிரம்ப அரூர் பெரிய ஏரிக்கு உபரி நீர் வெளியேறி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு மையிலன் ஏரி நிரம்பியுள்ளதால், மகிழ்ச்சியடைந்த தொட்டம்பட்டி மற்றும் நம்பிப்பட்டி பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரியின் கரைப் பகுதியில் ஆட்டு கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து, மலர் தூவினர்.

Views: - 3

0

0