10 ஆண்டுகளில் மட்டும் 950 லாக்கப் மரணங்கள்… டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Author: Babu Lakshmanan
21 மே 2022, 12:21 மணி
Quick Share

திருச்சி : கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 950 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து பயிற்சி முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி.கள்,உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தற்போது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்று உள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி ஒருவர்கூட காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உயிர் இழக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து இருக்கக்கூடிய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

காவல்துறையினர் தாக்கியதால் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் உயிர் இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் உடல்நலக் குறைவாலும் மருத்துவ கட்டுப்பாட்டில் இருந்தவர்களும் கூட உயிர் இழப்பார்கள். ஒரு சிலர் காவலர்களை தாக்குகிறார்கள். அப்போது அவர்களிடமிருந்து காவலர்கள் தங்களை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் வர்மக்கலை, கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும் இந்த கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. சிறையில் இனி ஒருவர்கூட இறக்கக்கூடாது. காவல் நிலையம் மரணம் இனி இருக்கக்கூடாது.

காவல்துறையினர் தேவைக்கு மட்டும் தங்கள் பலத்தை உபயோகப்படுத்தலாம். குற்றவாளிகள் தான் காவல்துறையினரை பார்த்து பயப்பட வேண்டும். நல்லவர்கள் பயப்பட தேவையில்லை. இதுவரையில் சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு சிறந்த டாக்டர்கள் மூலமாக மனநல பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூலமாக காவல்துறையினர் அதிகமானோருக்கு அந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

காவலர்களுக்கு ஏற்படும் மன இருக்கத்தை குறைப்பதற்காக கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆபத்து வரும்போது காவலர்கள் திறமையாக செயல்பட வேண்டும். பொதுமக்களை காவல்துறையினர் ஆபத்து நேரத்தில் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தி வருகிறோம். கள்ளச்சாராயம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சில மலைப் பகுதிகளில் மட்டும் தான் இருக்கிறது. அதையும் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவல்துறையில் சேர்வதற்காக 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப் படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • anna திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
  • Views: - 796

    0

    0