“என் ஹீரோவைக் காப்பாற்றியதற்கு நன்றி“ : ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்த கடிதம்!!
3 September 2020, 6:13 pmசென்னை : தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனை நன்றாக சிகிச்சை அளிப்பதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நன்றிக் கடிதம் வந்துள்ளது.
சென்னையை சேர்ந்த ரங்கேஷ் என்பவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் என் ஹீரோவைக் காப்பாற்றியதற்கு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்றி என நெகிழ்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில் உள்ள விபரம் பின்வருமாறு : சென்னையை சேர்ந்த பாலன் ( வயது 58) என்பவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மகன் ரங்கேஷ் தந்தையை காப்பாற்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
பாலனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுரையீரல் 70 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாகவும், பல லட்சம் செலவு செய்தாலும் அவரது உயிரை காப்பாற்றுவது கடினம் என் கூறிவிட்டனர். ஆனால் நம்பிக்கை இழக்காத மகன் ரங்கேஷ் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு தனது தந்தையை அழைத்து சென்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தந்தையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். உடனே அவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. உண்மையில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை கண்டு வியந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கவனிப்பை விட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், 17 நாட்களில் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தற்போது பூரண குணமடைந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.
0
0