ஹோட்டலில் வாங்கிய காஸ்ட்லி இட்லி சாம்பாரில் கிடந்த செத்த ‘பல்லி’: ஊழியர்களின் அலட்சிய பதில்…வைரலாகும் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
12 January 2022, 1:34 pm
Quick Share

கோவை: சித்தாபுதூரில் உள்ள தனியார் உணவகத்தில் வாங்கிய இட்லியில் பல்லி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் “இட்லி விருந்து” எனும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு நேற்றிரவு தனது நண்பர்களுடன் வந்த ஏழுமலை என்பவர் இட்லியை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டுக்குச் சென்று பார்சலை பிரித்து பார்த்தபோது சாம்பாரில் பல்லி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அந்தப் பார்சலை சம்பந்தப்பட்ட கடைக்கு எடுத்துச் சென்ற ஏழுமலை, உணவக ஊழியர்களிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்போது உணவக உரிமையாளர் இல்லாததால், மீண்டும் காலை வந்து பார்க்குமாறு உணவக ஊழியர்கள் மெத்தனமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உணவு பார்சலில் பல்லி இருப்பதை தனது செல்போனில் காணொலியாக பதிவு செய்த ஏழுமலை, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் வைரலானதையடுத்து, காணொலியை ஆதாரமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் புகாரளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் சுகாதாரமற்ற உணவு தான் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இனியும் அலட்சியமாக இருக்காமல், அனைத்து ஓட்டல்களையும் முறையாக சோதனை செய்து, சுகாதாரமான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Views: - 228

0

0