பல்லடம் அருகே விவசாய கிணற்றுக்குள் பாய்ந்த சொகுசு கார் : இரண்டு இளைஞர்கள் மீட்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2021, 3:41 pm
Car in Well -Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சாலையோர 80 அடி ஆழ விவசாய கிணற்றில் சொகுசு கார் பாய்ந்து விபத்து ஏற்பட்டத்தில் பெட்ரோல் பங்க் அதிபர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே பல்லடத்தில் இருந்து காமநாயக்கன்பாளையம் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 80 அடி ஆழ விவசாய கிணற்றினுள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த ஒண்டிபுதூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் அதிபர் கவுசல் குமார் (வயது 22) அவருடன் காரில் பயணித்த ஹரிஷ் (வயது 18) ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் முதலுதவி சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கிணற்றினுள் சிக்கியிருந்த சொகுசு காரை போலீசார் மீட்டனர்.

இந்த விபத்தின் காரணமாக பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே விவசாய கிணற்றில் அதிவேகமாக சென்ற கார் பாய்ந்து நிகழ்ந்த விபத்தில் பெட்ரோல் பங்க் அதிபர் உள்பட 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 484

0

0