தரையில் படுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 7:45 pm
Scavengers Protest - Updatenews360
Quick Share

48 வார்டுகளைக் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக மாநகராட்சி மூலம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் பணியாற்றும் போது ஒவ்வொருவரின் ஊதியத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது.

பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அந்தப் பணத்தை தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்பொழுது திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு தற்பொழுது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மூலம் 20 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு இந்த பணிகளை தொடர்ந்து வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் ஆணையாளர் அறை முன்பாக தரையில் படுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயரிடம் நடந்த பேச்சுவார்த்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தராத பட்சத்தில் திண்டுக்கல் மாநகர் முழுவதும் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 299

0

0