ஜல்லிக்கட்டு மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்பனை.. தாராபுரத்தில் பதுங்கியிருந்த வடமாநில கும்பல் கைது: பகீர் பின்னணி!!

Author: Babu Lakshmanan
23 January 2023, 4:06 pm
Quick Share

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதிய வடமாநில கும்பல் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை பகுதிகளில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.

கடந்த ஜன.10ம் தேதி நள்ளிரவில் கூடல் புதூர் சோதனை சாவடியில் மாடுகளுடன் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் தவமணி இரும்பு பேரிகார்டை நடு ரோட்டிற்கு இழுத்து போட்டு தடுக்க முயன்றார். அதற்குள் வாகனத்தில வந்த கும்பல் அதிவேகமாக வந்து பேரிகார்டரில் மோதி நிற்காமல் சென்று விட்டனர். இதில் எஸ்.ஐ. தவமணி இடது காலில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கூடல் புதூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் , விபத்து ஏற்படுத்திய தினம் மதுரையில் பல்வேறு பகுதிகளில் மாடு திருடு போனதாக புகார் எழுந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், பரவை சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரபடுத்திய நிலையில், தாராபுரம் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாகுல், சுபீர்’ நாசர், இருபான், ஹமுதீன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளையும், வீட்டிற்கு வெளியே கட்டிப் போட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளைகளையும் திருடி தாராபுரம் கொண்டு சென்று விடுவதாகவும், அங்கிருந்து கேரள வியாபாரிகள் அடி மாட்டிற்கு (கறிக் கடைக்கு) கேரள மாநிலத்திற்கு வாங்கி சென்றுவிடுவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்கள் மாடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய இரண்டு வாகனத்தையும், பறிமுதல் செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வடமாநிலத்தில் இருந்து கும்பல், கும்பலாக தமிழகத்தை நோக்கி படையெடுத்து வரும் அவர்கள் செய்யும் இந்த திருட்டு வேலையால் வேதனையடைந்த போலீசார் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

Views: - 359

0

0