கஞ்சாவுக்கு கெடுபிடி.. மாறாக போதை மாத்திரைகள் சப்ளை.. மருந்தாளர் உள்பட இருவர் கைது ; போலீசார் அதிரடி

Author: Babu Lakshmanan
27 December 2022, 9:22 am
Quick Share

மதுரையில் அனுமதி இன்றி போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மதுரை மாநகரை பல்வேறு பகுதிகளில் மாநகர காவல் துறை கடும் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வைகை வடகரை பகுதியில் வாகனத் தணிக்கை போலீசார் மேற்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக மூன்று பேர் வந்துள்ளனர். போலீசாரை பார்த்தவுடன் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்நபர் மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடகாடு பட்டியைச் சேர்ந்த தமிழ்அழகன் (19) எனவும், தப்பி ஓடியவர்கள் தினேஷ் மற்றும் கவாஸ்கர் என்ற வெள்ளையன் எனவும் தெரியவந்தது. தினேஷ் நண்பரான முரளி தாஜ் (27) டிபார்ம் படித்தவர்.

மதுரை மாவட்டம் முழுவதும் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் போலீசாரால் பெரும்பளவு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், முரளிதாஜிடமிருந்து போதைக்கான தூக்கமாத்திரை மற்றும் வலி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில், முரளிதாஜை போலீசார் விசாரித்ததில், D.Pharm படித்துள்ளதாகவும், ஏற்கனவே மெடிக்கல் ஷாப் வைத்திருந்ததால் தனக்கு மருந்து விற்பனையாளர்களிடம் அதிக தொடர்பு இருப்பதாகவும், தற்போது போலீசாரின் கடுமையான நடைவடிக்கையின் காரணமாக கஞ்சா கிடைப்பது மிகவும் கடினம் என்பதால், போதை தரக்கூடிய மாத்திரைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து தன்னை தேடி வருபவர்களுக்கு அதிக லாபத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து அவரிடம் இருந்து மொத்தம் 17 ஆயிரத்து 30 மாத்திரைகளும், 105 மருந்து பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். தலைமுறைவான தினேஷை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Views: - 387

0

0