மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார் ; உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத வைகோ…!!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 4:27 pm
Quick Share

மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருமுத்து தியாகராஜர் – இராதா தம்பதியரின் மகனான கருமுத்துகண்ணன். இவர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டுவந்தார். இதேபோன்று தியாகராஜர் நூற்பாலைகளின் தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆன்மீக பணிகள் மீதான ஆர்வத்தால் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராகவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார். இவர் தக்காராக இருந்தபோது மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

தொடர்ச்சியாக மீனாட்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தன்று அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கருமுத்து கண்ணன் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடதக்கது. கருமுத்து கண்ணன் மத்திய அரசின் ஜவுளி குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணிக்கு வீட்டில் காலமானார். தமிழக அரசின் சார்பில் கருமுத்து கண்ணனுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது துணைவியாரின் பெயர் உமா. இவருடைய மகன் ஹரி தியாகராஜன்.

இந்நிலையில் இவரது உடலானது பொதுமக்களின் அஞ்சலிக்காக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரபலங்கள், ஆன்மிக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கனிமொழி‌ எம்.பி. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எச்.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, கருமுத்து கண்ணன் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, கண்ணீர் விட்டு கதறி அழுத வைகோ, மகன் ஹரி தியாகராஜனிடம் கருமுத்து கண்ணனுடனான நினைவுகளை தெரிவித்தார்.

Views: - 353

0

0