குடிபோதையில் தகராறு : கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்…
Author: kavin kumar31 ஜனவரி 2022, 4:55 மணி
மதுரை : மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அய்யாவு மகன் அக்னிராஜ் (வயது 27)என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அக்னி ராஜ் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் நண்பர்களோடு வெளியில் சென்றவர் பிறகு அக்னி ராஜ் வீடு திரும்பவில்லை. எனவே நாகரத்தினமும் அவரது கணவர் ராமரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஜீவா நகர் 2-வது தெரு கணேசன் ரோடு பகுதியில் உள்ள ஒயின்ஷாப் கடையின் பின்புறம் அக்னி ராஜ் படுகாயங்களுடன் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே அக்னி ராஜ் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அக்னி ராஜூக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. அக்னிராஜ் நேற்று இரவு ஜீவாநகர் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடைக்கு சென்று உள்ளார். அங்கு மதுகுடித்துவிட்டு சிறுநீர் கழிப்பதாக கடையின் பின்புறம் சென்றார்.
அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அக்னிராஜூடன் தகராறில் ஈடுபட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அக்கினி ராஜை கத்தியால் சரமாரியாக குத்தியது. மேலும் கொலை வெறி கும்பல் அக்னி ராஜை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது.இந்த தாக்குதலில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.அவரை கொன்றது யார்? முன்விரோதம் அல்லது பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? ஜெய்ஹிந்த்புரம் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0
0