மதுரையை வலம் வரும் கொரோனா..! மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு நோய் தொற்று..!
10 August 2020, 3:56 pmமதுரை : மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதேவேளையில், நோய் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நோய் தொற்றுக்கு அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் மதுரையும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதுவரை அங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மதுரை தெற்கு தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சரவணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, பழனி, குளித்தலை தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.