தாய் பாசத்தால் கொலைகாரனாக துணிந்த மகன் : சகோதரனை வெட்ட அரிவாளுடன் வெறியோடு அலைந்த அதிர்ச்சி சம்பவம்..!!

24 November 2020, 6:14 pm
madurai - updatenews360
Quick Share

மதுரை : உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் அண்ணனை வெட்டி கொலை செய்ய பட்டபகலில் கத்தி அரிவாளுடன் இளைஞர் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தைச் சேர்ந்த அறிவானந்தம் என்பவரது மனைவி வனத்தாய். இவர்களுக்கு அருண், அர்ஜூனன் என்ற இரு மகன்கள் உள்ள நிலையில், அண்ணன் அருண் மதுரை செல்லூர் பகுதியில் வசிப்பதாகவும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது மகன் அர்ஜூனனும் கட்டத்தேவன்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டில் வசித்து வந்த சூழலில், தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதனால், வீட்டில் தனியாக இருந்த வனத்தாயுடன் மூத்த மகன் அருண் சண்டையிட்டதால், அவர் விட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சகோதரன் அர்ஜூனன், பெற்ற தாய் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதான் காரணம் என அண்ணன் அருணிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் சகோதரன் அருணை கொலை செய்ய திட்டம் தீட்டிய தம்பி அர்ஜூனன், அவரது மாமனார் மொக்கத்துரை, மைத்துனன் வனராஜா, அடையாளம் தெரியாத நபர் என நான்கு பேர் பட்டாக்கத்தி, அரிவாளுடன் அவர் வசித்து வந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்டு பயந்து போன அருண், தனது மனைவி ரோஜா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வீட்டிற்குள் இருந்தவாறே கதவை அடைத்துக் கொண்டார். வெகுநேரமாக நான்கு பேரும் கத்தி அரிவாளுடன் காத்திருந்தவர்களை உறவினர்கள் தடுத்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த போது அருண் காவல் அவசர அழைப்பு எண் 100க்கு அளித்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 15

0

0