மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அலைமோதிய கூட்டம்!!
17 September 2020, 10:26 amபுதுச்சேரி : மகாளய அமாவாசையையொட்டி புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அவர்தம் குடும்பத்தினர் அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு நல்லது என்பதாலும், அதேபோல் இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள், இந்த மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த பலனை கொடுக்கும் என்பதால் இந்நாளில் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.
அதன்படி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளான காந்தி சிலை, குருசுக்குப்பம் கடற்கரைப்பகுதி, வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தங்களது நேர்ந்திகடனை செலுத்தினர்.