தனியார் தோட்டத்து மின் வேலியால் கோவையில் ஆண் யானை பரிதாப பலி..

18 November 2020, 1:19 pm
Quick Share

கோவை: தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி கோவை சிறுமுகை அருகே யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுக்காடு பகுதியில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்

அப்போது, யானை புதுக்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, தோட்ட உரிமையாளர் முருகேசனிடம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்த சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார்.

தொடர்ந்து புதுக்காடு பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மின் வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்ற நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் வனவிலங்குகள் உயிரிழந்தால் தோட்டத்தின் உரிமையாளருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலையில் முருகேசன் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.