‘ஹலோ, நான் கலெக்டர் பேசுறேன்’… ரூ.75 ஆயிரம் அனுப்ப முடியுமா..? பணமோசடிக்கு முயன்ற நபரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
25 March 2023, 5:51 pm
Quick Share

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் எனக் கூறி பணம் கேட்டு பெற முயன்ற வழக்கில் புதுக்கோட்டையை சேர்ந்த சந்தான பாரதி என்பவரை காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வரும் பிரபல பட்டு ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்கேபி.கோபிநாத் என்பவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசுவதாகவும், சற்று இருங்கள் எனக் கூறிய நிலையில் வேறு ஒரு நபர், தான் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உதவியாளர் எனவும், வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் அவசர தேவைக்கு தேவைப்படுவதாகவும் கூறி வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத், இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்தார். இதனை சைபர் க்ரைம் காவல் துறைக்கு மாற்றம் செய்து எஸ்பி டாக்டர் எம். சுதாகர் உத்தரவிட்டு விசாரணை மேற்கொள்ள கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் ராஜகோபால் , சதீஷ் , ஆல்பர்ட் ஜான், ஆசைத்தம்பி குழுவினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பண உதவி கேட்டது உறுதி செய்யப்பட்டதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந் நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரிய வந்தது. எனவே மீண்டும் அவரை இவ்வழக்கில் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் தஞ்சாவூர் சிறையில் அடைத்தனர். சந்தானம் என்கிற சந்தானபாரதி, இதே போல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Views: - 355

0

0