மாஸ்டர் விமர்சனம் : விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்தாரா விஜய்? ரசிகர்கள் கருத்து..!

13 January 2021, 10:29 am
Master Review- Updatenews360
Quick Share

பொங்கலுக்கு வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த விமர்சனம் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி ஒன்றில் உளவியல் துறை பேராசிரியர் தான் ஜே.டி (விஜய்). சிறுவயதில் துன்பங்களுக்குள்ளாகி தான் கல்லூரியில் பேராசிரியராகிறார். ஆனால், ஜே.டி.,க்கு குடிப்பழக்கம் அதிகம். கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஜே.டி, அங்கு மாணவர்களுக்கு இடையேயான தேர்தலை நடத்தி முடிக்கிறார்.

ஆனால், தேர்தல் முடிந்ததும் சில பிரச்சனைகள் வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், சக பேராசிரியையாக வரும் சாரு (மாளவிகா மோகனன்) அக்கறையின் படியும் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆசிரியராக செல்கிறார்.

அங்கு சென்ற பிறகு தான் சிறுவர்களை பயன்படுத்தி பவானி (விஜயசேதுபதி) பல குற்றங்களை செய்வது தெரியவருகிறது. தனது குடிப்பழக்கத்தை எதற்காக விடுகிறார். சீர்திருத்தப்பள்ளியில் பவானியால் பலிகடாவாக்கப்படும் சிறுவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

இளமைக்கால படங்களில் கூட இத்தனை அழகாய் விஜயை எந்த இயக்குனரும் காட்டியதில்லை என்ற அளவுக்கு மிளிர வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கில்லி படத்தில் வரும் கபடி காட்சிகளைப்போல் இந்த படத்திலும் கபடி விளையாட்டு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுத்தரப்பினருக்கும் மெய்சிலிர்க்கும் வகையில் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தொட்டதுக்கெல்லாம் சென்டிமென்ட் காட்சிகளை வைத்து சில இடங்களில் சொதப்பலை செய்திருக்கிறார் இயக்குனர். கைதி படத்தின் இயக்குனரா இப்படியான திரைக்கதையை எழுதியுள்ளார் என்பது போன்ற சந்தேகம் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் எழும்.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தான் ஹூரோ என்பது போல் ‘மாஸ்’ காட்சிகள் அவருக்கு அமைந்துள்ளது. தனக்கென கிடைத்த கதாப்பாத்திரத்தை கட்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார். படத்தின் நீளம் அதிகம் என்பது சலிப்பை தட்டுகிறது.

அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், குட்டி ஸ்டோரி பாடல் துவங்குவதற்கு முன்பு படம் படு ‘ஸ்லோவாக’ செல்வதால் பாடல் அலுப்பு தட்டுகிறது.

மாஸ் ஹூரோ என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் விஜய், அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் அவர்களது நடிப்புக்கான இடத்தை வழங்கியுள்ளார் என்பது பாராட்டத்தக்க ஒன்றுதான். ஆனால், அதிரடியை எதிர்பார்த்து சென்ற அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

Views: - 6

0

0