வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

17 June 2021, 6:26 pm
theft - updatenews360
Quick Share

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தலைச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி ஜீவா (35) மற்றும் மகன் கெவின் (13) தலைச்சங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள தர்மகுளம் ஊருக்கு ஜீவாவின் தந்தை இல்ல புதுமனை விழாவிற்கு இருவரும் சென்றுள்ளனர். விழாவை முடித்துவிட்டு அங்கேயே தங்கிய நிலையில் பின்பு இன்று காலை தலச்சங்காட்டிலுள்ள வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர்.

அப்போது வீட்டைத் திறந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள் திருடப்பட்டதை கண்டு ஜீவா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் பீரோவின் லாக்கரில் இருந்து வளையல், செயின் உட்பட 40 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.

மேலும் வீட்டின் பின்புறம் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் மர்ம நபர்கள் சுலபமாக பின்புற கதவினை உடைத்து உள்ளே வந்து நகைகளை திருடி இருப்பது போலீசார் விசாரணையில் முதற்கட்டமாக தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 123

0

0