திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணி இடங்களுக்கான தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க வைகோ வலியுறுத்தல்

22 July 2021, 4:13 pm
Quick Share

சென்னை : திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு தமிழகத்தில் தேர்வு மையத்தை அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம் வைகோ விடுத்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது :- திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணி இடங்களுக்கான தேர்வுகளை, ஜூலை 23 முதல் 31 வரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தின் மதுரைக் கோட்டமும், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்ளே இடம்பெறுகின்றது.

கேரள மாநிலத்தில், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில், தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில், மதுரைக் கோட்டத்துக்கு உள்ளே ஒரேயொரு மையம் கூட இல்லை.

எனவே, தமிழக இளைஞர்கள், தேர்வுகளை எழுதுவற்காகக் கேரளத்துக்குச் சென்று, ஒரு வாரம் வரையிலும், விடுதிகளில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் கரோனா தொற்று இன்னமும் கடுமையாகத் தாக்கிக் கொண்டு இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே, இது தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கின்றது.

ரயில்வே அதிகாரிகளின் இத்தகைய போக்குக்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தக் கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதன் முதல் கட்டமாக, நாளை தொடங்க இருக்கின்ற இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்; அடுத்தகட்டமாக, தமிழகத்தில், தனிமனித இடைவெளியுடன், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போதுமான தேர்வு மையங்கள் அமைப்பதுடன், படித்து வேலை இல்லாமல் இருக்கின்ற, தமிழகத்தின் தகுதி உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சம நீதி கிடைத்திட ஆவன செய்திடுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 114

0

0

Leave a Reply