மேகதாது அணை விவகாரம் : நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!

11 July 2021, 5:40 pm
All Party Meeting - Updatenews360
Quick Share

சென்னை : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, முன்னதாக தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து,மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில்,மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால் தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின், கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

இருப்பினும்,காவிரியின் குறுக்கே அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், விவசாயிகளின் நலனை காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்கள் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சனை குறித்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,நாளை காலை 10-30 மணியளவில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 111

0

0