தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி.க்கு நினைவு மண்டபம் : மகன் சரண் அறிவிப்பு!!
27 September 2020, 12:45 pmசென்னை : மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பி நேற்று முன்தினம் காலமானார். கொரோனா தொற்று இல்லை என்ற போதிலும் சுவாசுக் கோளாறால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று அவருடைய உடல் திருவள்ளூரில் உள்ள எஸ்.பி.பி.க்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில எஸ்.பி.பி.சரண் சடங்கு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்பிபிக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
நினைவு மண்டபம் கட்டப்படுவது குறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்த அவர், எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட போலீசுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.