மலைப்பாதையில் மண்சரிவு அபாயம்.! வாகன ஓட்டிகளே உஷார்.!!
14 August 2020, 12:18 pmகோவை : மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பருவமழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் வழியே தான் கடந்து செல்ல வேண்டும். குறிப்பாக இதில் அதிகப்படியான சாலை பயன்பாடு என்பது குன்னூர் சாலை வழியே தான் அதிகம்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையானது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் குன்னூர் அவலாஞ்சி என அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் நீலகிரியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு அதனை சரிசெய்யும் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இதனிடையே நீலகிரி மக்களை கோவையுடன் இணைக்கும் முக்கிய சாலையான குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் பருவமழை காணமாக மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழும் அபாயத்தில் உள்ளது.
தண்ணீர் வரத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு மரங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதுடன் மலைப்பகுதியில் இருந்து தாழ்வை நோக்கி ஓடும் நீர் வழித்தடங்களில் பெரிய பெரிய பாறைகளும் அங்காங்கே உருண்டு வருவதால் சாலை போக்குவரத்துக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
ஆகவே, சாலை ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் விதமாக உள்ள இடங்களை கண்டறிந்து அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.