ஆட்டோ மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : பரபரப்பான சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 8:10 pm
Auto Collide- Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே துக்க நிகழ்விற்கு கலந்து கொள்ள வந்தவர்களின் ஆட்டோ மீது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி விபத்து மோதி 4 பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை ஆர்எஸ் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). தனது மகள் வள்ளி (வயது 35)அவரது கணவர் ராஜா (வயது 38) ஆகியோருடன் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அருணாச்சலம் (வயது 52) என்பவரது ஆட்டோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.

அவர்கள் வந்த பயணியர் ஆட்டோ காரணம்பேட்டையை கடந்த பொழுது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த பயணியர் ஆட்டோவில் பயணித்த ஆறுமுகம், அவரது மகள் வள்ளி, அவருடைய கணவர் ராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருணாச்சலம் ஆகிய நால்வரும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தனர்.

அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் படுகாயமடைந்த நால்வரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் நால்வருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தலைமறைவாகி விட்ட நிலையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த விப்பத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 461

1

0