பள்ளி திறக்கும் முதல் 5 நாட்களில்… 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்..!!!

Author: Babu Lakshmanan
14 June 2022, 2:53 pm
Anbil Mahesh - Updatenews360
Quick Share

திருச்சி : மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார்.

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :- தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் கோரிக்கைகளை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கி வருகிறோம். மாணவர்களுக்கு வகுப்பறையில் செல்போன்கள் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அப்படி மீறி எடுத்து வந்தால் கண்டிப்பாக அதனை பறிமுதல் செய்வோம். மீண்டும் அதனை கொடுக்கப்பட மாட்டாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்திய காரணத்தினால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதனை சரி செய்வதற்கு வகுப்பறைகளில் பாடம் எடுப்பதற்கு முன்பாக அவர்களுக்கு ரெஃரெஸ்மெண்ட் கொடுக்கப்பட்டு பின்னர் தான் வகுப்புகள் துவக்கப்படுகிறது.

குறிப்பாக 11,12ம் வகுப்புகளுக்கு முதல் 5 நாட்களுக்கு என்.ஜி.ஓ, காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள் சிறப்பு வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். நீட் தேர்வை பொறுத்தவரை தொடர்ந்து நாம் சட்டபூர்வமாக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக தான் நம் ஆளுநர் ஜனாதிபதி அவர்களுக்கு சட்டபேரவை தீர்மானங்களை அனுப்பி வைத்துள்ளார். கண்டிப்பாக இதில் தமிழக முதல்வர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜி.எஸ்.டி வரி நிலுவை குறித்து பாரத பிரதமர் மோடியிடம் பேசி நாம் அதனை பெற்றுள்ளோம். அதேபோல் நியாயமான ஒரு குரலாக இது இருப்பதால் நிறைவேறும் என்று நம்புவோம். பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அல்லது பெற்றோர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கக்கூடாது.

இரவு 12.30 மணி வரை கூட காத்திருந்து அரசு பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்து வந்ததை நீங்களே பார்த்திருப்பீர்கள். வருகின்ற மாணவர்களை தக்க வைத்து கொள்ள எல்லா கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறோம். அந்த வகையில், 9494 புதிய ஆசிரியர்களை இந்த வருடம் நாங்கள் எடுக்க உள்ளோம்.

படிப்படியாகத்தான் இல்லம் தேடி கல்வித்திட்டம் நிறுத்தப்படும். ஏனென்றால் இப்போது தான் வகுப்புகள் முறையாக துவங்கியுள்ளது, என தெரிவித்தார்.

Views: - 533

0

0