திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா? ஸ்டாலினுக்கு அமைச்சர் சிவி சண்முகம் பதிலடி..!!

17 November 2020, 5:53 pm
stalin - cv shanmugam - updatenews360
Quick Share

சென்னை : கல்குவாரி உரிமம் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சிவி சண்முகம் பதிலளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரையில் இருக்கும் கல்குவாரி உரிமத்தை அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகனுக்கு, அமைச்சர் சிவி சண்முகம் வழங்கியதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சிவி சண்முகம் இன்று அதிரடியாக பதிலளித்து பேசினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாள்தோறும் அறிக்கை விடுகிறோம் என்னும் பெயரில் காமெடி செய்யக் கூடாது. எதிர்கட்சி தலைவராகவும், முன்னாள் மேயர், முன்னாள் துணை முதலமைச்சர், நாளைய முதலமைச்சர் என்னும் பகல் கனவை கண்டு கொண்டிருப்பவர் தினமும் அறிக்கைகளை வெளியிடுகிறார். அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு, அதில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் சரியா..? தவறா..? என்பது தனக்காவது தெரிய வேண்டும், அப்படி தெரியவில்லையெனில், தெரிந்தவர்களைக் கேட்டாவது தெரிந்துகொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டுகளை சொல்லக் கூடாது என நான் கூறவில்லை. எதிர்கட்சித் தலைவருக்கு குற்றச்சாட்டுக் கூற முழு உரிமை உண்டு. ஆனால், உண்மைகளை தெரிந்த பின்னரே அந்தக் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க வேண்டும். பொது ஊழியர்களின் குடும்பத்தினர்கள் அரசு ஏலத்தில் பங்கேற்கக் கூடாது என எந்தச் சட்டத்திலும் எந்த இடத்திலும் கூறவில்லை. திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா..? அவர்கள் யாரும் தொழில் செய்வதில்லை..? குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்பாக தவறுகளை பார்க்க வேண்டும்.

அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகன் முறையாக சட்டப்பூர்வமான ஏலத்தில் பங்கேற்று, ரூ.28 லட்சத்திற்கு எடுக்கப்பட்ட குவாரியை 2 ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். அதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், என அவர் தெரிவித்தார்.