சசிகலாவால் இங்கு யாரும் அமைச்சர்கள் ஆகவில்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு..!

21 September 2020, 4:43 pm
jayakumar upatenews 360
Quick Share

சென்னை : சசிகலாவால் யாரும் அமைச்சர்கள் ஆகவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- விவசாயிகளின் நலனை அ.தி.மு.க எப்போதும் பாதுகாக்கும். அம்மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்புமில்லை என்ற வாக்குறுதியை பெற்ற பின்னரே, அதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், விவசாயிகளின் முதுகில் குத்தியது தி.மு.க தான். விவசாயிகளுக்கு தி.மு.க செய்துள்ள துரோகத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என கருதும் ஸ்டாலின் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும். தி.மு.க தமிழகத்தை ஆண்ட காலம் கருப்பு ஆட்சி காலம் என விமர்சித்ததோடு, 17 வருடங்கள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க கச்சத்தீவு என்ற நமது அடிப்படை உரிமையை இல்லாமல் செய்துவிட்டனர்.

மேலும், ஆட்சியில் இருந்தபோது அன்று மக்களுக்கு துரோகம் செய்த தி.மு.க ஓநாய்கள் அனைவரும், இன்று ஆடுகள் போல வந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் செய்பவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். மேலும், ஜனநாயகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்ய உரிமையுண்டு. ஆனால், பணம் எந்த இலாக்காவில் வருகிறதோ, அந்த இலாக்காவில் தனது குடும்ப உறுப்பினர்களை நியமித்த தி.மு.க வினருக்கு அவ்வாறான தார்மீக உரிமைகள் கிடையாது.

கட்சி நிலைபாடு என்பது முதலமைச்சர் எடுக்கும் முடிவுதான். சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கிதான் அ.தி.மு.க.வின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கட்சியில் மற்றபடி வேறு எந்த சலசலப்பும் இல்லை. மேலும், சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவில்லை. அமைச்சர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட பின்னரே அவர் முதலமைச்சர் ஆகியுள்ளார், எனக் கூறினார்.

Views: - 9

0

0