ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது: ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் காமராஜ்

20 September 2020, 2:17 pm
Quick Share

திருவாரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும் என ஸ்டாலினின் கருத்திற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் அமைப்பிற்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அமல்படுத்தாது. அதனால்தான் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றாமல் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் ஒப்பந்த பண்ணையத் திட்டம் என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு மசோதாவாக நிறைவேறியுள்ளது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டம், இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்கிற சூழ்நிலை நடைமுறையிலுள்ளது. மேலும் வேளாண் பொருட்களான உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை தேக்கிவைத்து விவசாயிகள் சற்று கூடுதல் விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம் என்கிற மசோதாவும் நிறைவேறியுள்ளது. அதேநேரத்தில் விவசாயிகளுக்கு எதிராக வணிகர்கள் விலை ஏற்றத்தை ஏற்படுத்தினால் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் ஆகிய மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாரத பிரதமர் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் கழிவறைகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. புகார்கள் மீது குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்து இருக்கும்பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டம் முடியும் ஆறுமாதத்தில் விடியல் பிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், அவர் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும். தற்போதைய ஆட்சி மக்கள் விரும்புகின்ற ஆட்சி 2021 தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் கடைபிடிக்கப்படும். ஏற்கனவே முதல்வர் உறுதியாக கூறிவிட்டார். ஆகையால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.