அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை கூடுதலாக ஒதுக்கீடு: முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர்

1 November 2020, 11:13 pm
Quick Share

சென்னை: உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையை ஏற்று கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறையை ஆளுநர் ஒதுக்கீடு செய்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று அவரது சொந்த கிராமமான, தஞ்சை மாவட்டம் வன்னியடி கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு மூத்த அமைச்சர்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், துரைக்கண்ணு மறைவு காரணமாக, அவர் வகித்த வேளாண் துறையை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் இன்று வெளியிட்டுள்ளார். அதில், துரைக்கண்ணு மறைவு காரணமாக அவர் வகித்த வேளாண் துறையை, முதல்வரின் பரிந்துரையை ஏற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் தமிழக ஆளுநர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 41

0

0