அ.தி.மு.க.வில் தே.மு.தி.க என்றும் பயணிக்கும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!!

26 August 2020, 1:12 pm
RB Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை : விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என மதுரையில் அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்பி உதயகுமார் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

மதுரையில் கொரோனா தடுப்பு பணி இரவு பகலாக மேற்கொண்டதன் பலனாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பது எதிர்கட்சி தலைவரின் வாடிக்கையாக உள்ளது. மத்திய அரசு கொடுக்கும் தளர்வுகளை முதல்வர் கவனத்துடன் ஆய்வு செய்து கையாண்டு வருகிறார். ரயில் போக்குவரத்து, பொது போக்குவரத்து போன்றவை கால சூழ்நிலைக்கு ஏற்ப துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பொது போக்குவரத்து துவங்கியதால் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிட்டது.

5 மாத காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தத்தளித்து வந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் வேளாண் பணிகள் தடையின்றி கிடைக்கவும் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இன்று விலைவாசி கட்டுக்குள் உள்ளது என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை. தேர்தலை மையமாக வைத்து மக்களை சந்திப்பவர்கள் அல்ல அதிமுக, எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பதுதான் அதிமுக, என்றார்.