முருகரும் மகிழ்ச்சி… தரிசிக்க வரும் பக்தர்களும் மகிழ்ச்சி : திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்..!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 4:13 pm
Quick Share

திருவள்ளூர் : திருத்தணி முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு பெற்ற ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி மூலவர் கடவுளுக்கு சுகந்த திரவியங்களால் அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, வைர, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு காவடி செலுத்த வகையில் நேற்று நள்ளிரவே முதலே மலைக் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடிய விடிய காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோயிலில் குவிந்து வருவதால், காவடிகளின் ஓசைகளும், அரோகரா முழக்கங்களும் பம்பை, உடுக்கை முழங்க பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடி, பன்னீர் காவடிக்களுடன் முருகனின் பக்தி பாடல்களுடன் பரவசம் பொங்க மலைக்கோயிலில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர்.

ஆடிக்கிருத்திகை விழாவில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று திருப்படிப்படிகள் வழியாக மலைக்கு நடந்துச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோயிலில் அனைவரும் சமம் என்ற நிலையில் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம், தடையின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் முருகரும் மகிழ்ச்சி அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என தெரிவித்தார்.

Views: - 183

0

0