‘‘இந்த கால திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள்“ : அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு!!

26 September 2020, 5:41 pm
Sellur Raju - updatenews360
Quick Share

மதுரை : இன்றைக்கு திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள், அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவாகினார்கள் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை சவுராஸ்ட்ரா கூட்டுறவு வங்கியின் பங்கு மூலதன சான்றிதழ் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இயக்கத்திற்காக யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்போம். தமிழக மக்களுக்காக எதை எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். கட்சியில் யார் யார் தவறு செய்கிறார்களோ அவர்களை பக்கத்தில் வைக்காமல் விரட்டி விட்டு விடுவோம் என கூறினார்.

மேலும் பேசிய அவர், திமுகவின் ரவுடியிசத்தை பார்க்க அனுமதிக்க கூடாது. மிரட்டும் கட்சி ஆட்சி யாருடையது என்பது உங்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் மதுரையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக உள்ளது.

மோடியின் திட்டங்களையெல்லாம் நாங்கள் ஆதரித்துக்கொண்டுள்ளோம். மக்களுக்கு விரும்பாத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மோடியே பாராட்டி தமிழ்நாட்டின் மிகச்சிறந்த நிர்வாகத்தை பாராட்டியுள்ளார்.

அதிமுக என்ற கட்சி, எம்ஜிஆர் ஜெயலலிதா வளர்த்த கட்சி ஒருபோதும் சமுதாய மக்களை மறக்க மாட்டோம். எம்ஜிஆர் தான் எனது குரு. இன்றைக்கு திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள். அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவாகினார்கள். தடம் மாறாமல் நேர்வழியில் செல்ல அன்றைய திரைப்படங்கள் தான் உதவின.

மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அந்தச்சட்டம் சிறுபான்மை மக்கள் பயன்பெறும் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு எதிராக உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே அந்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து அதை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது. என்றார்.