“நானும் ரவுடி தான்“ என கூவும் ஸ்டாலின் : அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்.!!

14 August 2020, 4:41 pm
Vellore Sellur Raju - Updatenews360
Quick Share

வேலூர் : எதிர்க்கட்சித்தலைவர் தான் இருப்பதை காட்டிகொள்ள ஏதாவது பொய்யை சொல்லி நானும் ரௌவுடி தான் என கூறி வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆய்வு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம்,ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்ய தர்ஷினி, திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள், பத்திரபதிவுத்துறை அமைச்சர் வீரமணி,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் ரூ.23 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கும் கொரோனா காலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள் என்று கூறினார்.

கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக 3501 நகரும் ரேஷன் கடைகள் விரைவில் மாநிலம் முழுவதும் துவங்கப்படவுள்ளது. இதன் மூலம் எல்லா ரேஷன் கடை மக்களும் பொருட்களை பெற்றுகொள்ளலாம் இந்த மாவட்டத்தில் 101 நகரும் கடைகள் அமைக்கப்படவுள்ளது. தற்போது மழை பொழிவு உள்ளதால் விவசாயிகள் மாநிலம் முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் உரங்களை பெற்றுகொள்ள போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பு வைத்துள்ளதால் தான் உணவு உற்பத்தி அதிகம் கிடைத்துள்ளது என கூறினார்.

கூட்டுறவுத்துறையில் முறைகேடுகளை யார் செய்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் தலைவர் அல்லது நிர்வாக குழுவாக இருந்தாலும் யார் தவறு செய்தாலும் தப்பிக்க முடியாது இதற்காக சட்டத்திருத்தங்கள் திருத்தப்பட்டு கடுமையாக தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தார்.

இந்த அரசில் ஏதாவது குறை சொன்னால் தான் மக்களுக்கு தன்னை அடையாளப்படுத்திகொள்ள முடியும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், நடிகர் வடிவேலு காமெடி போல் நானும் ரௌவுடி தான் நானும் ரௌவுடி தான் என்று சொல்லிகொண்டுள்ளார் என்று விமர்சனம் செய்தார்.