எம்ஜிஆர் மடியில் இருந்தவர்கள் எல்லாம் வாரிசு ஆகிவிட முடியாது : அமைச்சர் அதிரடி!!

Author: Udayachandran
30 December 2020, 3:16 pm
Sellu Raju -Updatenews360
Quick Share

மதுரை : ரஜினி ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் அழகான முடிவு எடுத்து இருக்கிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தற்பொழுது தண்ணீர் தெப்பக்குளம் முழுவதும் முழுமையாக நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகு சவாரி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தெப்பக் குளத்தில் படகு சவாரி விடும் நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் படகு சவாரியை துவக்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் மதுரையின் மெரினாவாக மாறியுள்ளது என்றார்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை மட்டுமே தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். திமுக ஆட்சிக்கு வர கடுகு அளவு கூட வாய்ப்பில்லை என்று கூறிய அவர், அதிமுக இரண்டாக உடையும் என திமுக தலைவர் விமர்சனம் குறித்த கேள்விக்கு கட்சி செல்வாக்கை சீர்குலைக்க மு.க ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் உருவெடுத்துள்ளார்கள் என கூறினார்.

அதிமுகவினர் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்குவதாக வெளியாகும் தகவலில் கடுகளவு கூட உண்மை கிடையாது என்று கூறிய அவர், அந்தந்த கடை ஊழியர்கள் மட்டுமே டோக்கன் வழங்கி வருகிறார்கள் என்றார்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிதாக சீருடை வழங்கப்படவுள்ள நிலையில் சீருடை அணியாமல் யாரும் நியாயவிலைக் கடைகளில் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

ரஜினி ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் அழகான முடிவு எடுத்து இருக்கிறார். தன்னை நம்பியுள்ள ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக எடுத்துள்ள ரஜினியின் முடிவை வரவேற்கிறேன். ரஜினி தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்துள்ளார் என கூறினார்.

திரைத்துறையில் தமிழகத்திற்காக பல்வேறு பெருமை தேடித்தந்தவர் கமல். கமல் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கலாம் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கூறிய அவர் கமலஹாசனுக்கு வராததை விட்டுவிட வேண்டும் என்றார். நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது, எம்ஜிஆர் மடியில் இருந்தவர்கள் எல்லோரும் அவரது வாரிசாக முடியாது என்று கூறினார்.

Views: - 34

0

0