5 ஆண்டுகளில் 400 ஆதரவற்ற முதியோர்களுக்கு மறுவாழ்வு : கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

Author: Babu
1 October 2020, 5:00 pm
SP Velumani - Updatenews360
Quick Share

சென்னை : 400க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களை கடந்த 5 ஆண்டுகளாக அரவணைத்து வரும் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச முதியோர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், முதியவர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை பிள்ளைகள் பேணி காக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களும், விழிப்புணர்வுகளும் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட முதியவர்களை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அன்புடன் அரவணைத்து வரும் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “
கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்குட்பட்ட முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியோர்கள், பெறாத பிள்ளைகளென எண்ணி, காப்பகத்திற்கு அருகிலுள்ள ஏழை பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை இருவேளையும் கடந்த 3 ஆண்டுகளாக இலவசமாக உணவு சமைத்து அளித்து வருகின்றனர் எனும் செய்தி அறிந்து நெகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 400 ஆதரவற்ற முதியோர்களை அன்போடு அரவணைத்து, அடைக்கலம் அளித்து உன்னத சேவையாற்றி வரும் கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! சர்வதேச முதியோர் தினத்தன்று இச்சிறப்பான செயலினை பகிர்வதில் பெருமை கொள்கிறேன்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 58

0

0