கோவை மாணவர்களை பாராட்டிய பிரதமர்.! அமைச்சர் எஸ்.பி வேலுமணி நெகிழ்ச்சி.!!

2 August 2020, 4:13 pm
Sp Velumani Happy- Updatenews360
Quick Share

கோவை : கோவை மாணவர்கள் ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோரை பிரதமர் பாராட்டியதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2020’ போட்டி நேற்று துவங்கியது. இதில் நாடு முழுவதிலு இருந்தும் 164 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 27 மாணவர்கள் குழுக்கள் கலந்து கொண்டன.

இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று காலை கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கான மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முதன்மை கண்டுபிடிப்புகளுக்கான அலுவலர் அபய் ஜேரே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த சூழலில், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குழுவுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். இதில், தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தயாரிப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினர்.

கோவையில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பிரதமரிடம் உரையாற்றினர். அப்போது வணக்கம் என்று கூறி மாணவர்களிடம் பிரதமர் பேசினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் தாங்கள் தயாரித்த காவல் நிலையங்களுக்கு உதவு வகையில் ஆர்டிபீசியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence) பற்றி கூறினர். இதனை கேட்ட பிரதமர் மோடி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் கோவை மாணவர்களை பிரதமர் பாராட்டியது குறித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.வேலுமணி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” இறுதிப் போட்டியில் பங்கேற்று, மக்களுக்கு பயனளிக்கும் தொழில் நுட்பம் பற்றிய திறனை வெளிப்படுத்திய கோவை மாணவர்கள் ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோரை மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் சிறு வயது முதலே மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம் காட்டி தங்களின் திறனை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.