மைசூரில் உள்ள படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஒப்படைக்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்..!!
Author: Babu Lakshmanan11 August 2021, 4:28 pm
மைசூர் அலுவலகத்தில் உள்ள படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் கோரிக்கை விடுத்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:- தமிழ் கல்வெட்டுகளை மைசூரில் பாதுகாப்பதற்கு பதிலாக தமிழகத்திலேயே பாதுகாக்கலாமே..? என்ற உயர்நீதிமன்ற கேள்விக்கு, இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே. அந்த படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மைசூரில் உள்ள அலுவலகத்தில் உள்ளது. இதனை தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அங்குள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இன்னும் படிப்பையே (சொற்கள் அறியப்படாமல்) காணாத நிலையிலேயே இருக்கும் போது அதன் மூலம் வரலாற்றின் ஒரு பகுதியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுநல ஆர்வலர்கள் பலர் கோரிக்கைகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்காக நீதி அரசர்களும் அவர்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசும் அந்த கல்வெட்டுக்கான பிரதிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது, எனக் கூறினார்.
மேலும், கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை என்றால் அதை திராவிட மொழியுடன் அடையாளப்படுத்துவது ஏன்..? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- கல்வெட்டுகளில் பழமொழி கல்வெட்டுகள் உள்ளது. ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய அதிக கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே. எனவே, அதிக அளவு தமிழ் கல்வெட்டுகள் இருக்கும்பட்சத்தில் ஏன் அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்படாமல் வேறு மொழிக்காக நியமித்து உள்ளார்கள் என நீதி அரசர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக படி எடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கேள்வியை எழுப்பி உள்ளார்கள் என நினைக்கிறேன். தமிழ் கல்வெட்டுகளை நம்மிடம் அனுப்பி வைக்க வேண்டுமென்பது நம்முடைய கோரிக்கையாக உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
0
0