மீனவர்களின் உடல்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி : கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த சக மீனவர்கள்..!!

23 January 2021, 7:19 pm
Minister - fishers - updatenews360
Quick Share

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு பிறகு உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மரியாதை செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசைப்படகுகளில் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவஷருக்கு சொந்தமான விசைப்படகில், மெசியா, நாகராஜ், சாம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் சென்ற விசைப்படகு நடுக்கடலில் பழுதடைந்ததால், மறுநாள் கரைக்கு திரும்ப வேண்டிய நால்வரும் காணாமல் போகினர். அவர்களை சக மீனவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, நேற்று செந்தில்குமார், சாம் உடல் மீட்கப்பட்ட நிலையில், மெசியா நாகராஜ் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

பாக்ஜலசந்தி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் இடித்து முட்டி சேதப்படுத்தியதால், அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இலங்கையில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மீனவர்களின் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக மீனவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மீனவர்களின் சொந்த கிராமங்களுக்கு தனித்தனி ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டன.