நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவியை நேரில் சந்தித்த அமைச்சர்: லேப்டாப் வழங்கி பாராட்டு..!!

Author: Aarthi Sivakumar
5 November 2021, 5:08 pm
Quick Share

கோவை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி சங்கீதாவுக்கு லேப்டாப் வழங்கியுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற மாணவி நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு பழங்குடியின கிராமத்தில் தவித்து வந்த இந்த மாணவி குறித்து பல்வேறு ஊடங்களிலும் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தது. மேலும், தன்னார்வலர்கள் சிலரும் மாணவிக்கு உதவ முன்வந்தனர். இந்த நிலையில், மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் பழங்குடியினர் கிராமத்தில் முதல்முறையாக மாணவி ஒருவர் மருத்துவ படிப்பை படிக்கச் செல்வது ஊர் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சங்கீதாவுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த பகுதிக்கு என்னென்ன அடிப்படை அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து இப்பகுதி மக்களிடம் கேட்டறிந்துள்ளேன்.

மற்ற பழங்குடி மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் மாணவி சங்கீதா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி மாணவியை சந்துக்க வந்துள்ளேன். மாணவிக்கு கல்வி உதவிக்காக லேப்டாப் வாங்கி கொடுத்துள்ளோம்.

இந்த பகுதியில் மின்சாரம் இல்லாதை தெரிந்துக்கொண்டேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். பழங்குடி மாணவர்களுக்கு எளிதில் சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிக்கு தேவையான உதவிகளை அந்தந்த துறை சார்ந்து தனிப்பட்ட முறையில் செய்து தருவதாக உறுதி அளித்திள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 368

0

0