‘வாக்கு எண்ணும் மையத்திற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அனுமதி இல்லை’: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Author: Rajesh
21 February 2022, 6:57 pm
Quick Share

கோவை: நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் என்றும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பொறுத்தவரை மாநகராட்சிக்கு 1 மையம், 7 நகராட்சிகளுக்கு 7 மையங்கள், 33 பேரூராட்சிகளுக்கு 9 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர்கள் நகராட்சியில் 198 வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சியில் 504 வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 497 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் 3 நுண் பார்வையாளர்கள் வீதம் 150 நுண் பார்வையாளர் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் மாநகராட்சியில் 2400 காவலர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சியை சேர்த்து 1460 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதைத்தவிர வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுற்றிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருடன் 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வர அனுமதி இல்லை.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை. கொரோனா அச்சம் உள்ள சூழலில், அலுவலர்கள் மற்றும் முகவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா குறித்து நேற்று முன்தினம் வரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் பொழுது கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்ட நாகராஜன், மற்றும் பார்வையாளர் கோவிந்த ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 766

0

0