முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பாகும்: மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Author: Udayaraman
5 August 2021, 10:50 pm
Stalin_DMK_UpdateNews360
Quick Share

சென்னை: முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பு என மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 81. நாளை காலை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல், அதன் பின்பு மூல கொத்தளம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர், இன்று முதல் வருகிற 7ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும்,

கழக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானதாக தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்ற மதுசூதனன், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சாதாரண தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாக பழகியவர் மதுசூதனன் என்று புகழாரம் சூடியுள்ள முதல்வர் ஸ்டாலின், மதுசூதனனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “இளவயதிலேயே புரட்சித்தலைவரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். மதுசூதனனின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 97

0

0