முதலமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு : அதிர வைத்த அமைச்சர்!!

6 November 2020, 4:14 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தூத்துக்குடிக்கு வர முதல்வர் பயப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தெரிவித்து இருந்த நிலையில் வரும் 11ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு ஆய்வு பணிகளுக்காக வரவுள்ளதாகவும், விருப்பம் இருந்தால் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்தில் கழுகுமலை பகுதியில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தூத்துக்குடிக்கு முதல்வர் வருவதற்கு பயப்படுவதாக நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருந்தது தொடர்பாக கேட்டபோது தனது கட்சியினரை சந்திக்கவே மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும், தூத்துக்குடி வருவதற்கு முதல்வர் ஏன் பயப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வர் வரலாற்று திட்டங்களை வழங்கியுள்ளார்.

எம்ஜிஆர் காலத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் கொண்டு வரப்பட்டது.ஆனால் நாசகார ஸ்டெர்லைட் என்று சொல்கிறார்களே அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து திறப்பு விழா நடத்தியது திமுக என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்டத்தில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் என்றும், நான்கு கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கட்சியினைரை கூட பார்க்க பயந்து கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை அருகதை இல்லை என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் நடந்தவற்றை திமுக ஆட்சியில் நடந்ததாக தவறான கருத்துக்களை கூறி வருகிறார். பொது மேடையில் விவாதிக்க நாங்கள் தயராக இருக்கிறோம், துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மு.க அழகிரிக்கு பயந்து மதுரை பக்கமே எட்டிப் பார்க்க முடியாமல் இருந்தவர்தான் முக ஸ்டாலின்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட பின்னர் தான் மதுரைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு மரியாதை செய்து பெருமை சேர்த்தது அதிமுக அரசு, ஆனால் திமுக செம்மொழி மாநாடு நடத்தி கனிமொழிக்கு சிறப்பு சேர்த்த பெருமை உண்டு, அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் பெருமை சேர்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

தூத்துக்குடிக்கு வரும் 11ஆம் தேதி முதல்வர் வருகிறார். மு க ஸ்டாலின் விருப்பப்பட்டால் அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். நேரடியாக பார்க்கலாம். அவ்வளவு சிறப்பான ஆய்வுக் கூட்டமாக இருக்கும் என்றும் அழைப்பு விடுத்தார்.

எஸ் ஏ சந்திரசேகர் – நடிகர் விஜய் இருவருக்கும் இடையே உள்ள கருத்து முரண்பாடுகளை அவர்கள்தான் விளக்க வேண்டும், இதில் கருத்து சொல்வதற்கு இடமில்லை, நடிகர் விஜய்யே இல்லை என்று சொன்ன பிறகு அதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும், நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை முதலில் நடிகர் கமலஹாசன் சொல்ல வேண்டும் என்றும், அரசியலில் மூன்றாவது ,நான்காவது அணி கூட அமைக்கலாம், எத்தனை அணிகள் அமைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறினார்.

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் தெளிவாகத் தெரிவித்து விட்டார். ஹெச். ராஜா போன்றோர் சட்டத்தை மதிப்பார்கள் என்று நினைக்கிறோம் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தார்.

Views: - 22

0

0