தவறு செய்தால் பதவி நீக்கம்: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

10 May 2021, 8:46 pm
mks-updatenews360
Quick Share

சென்னை:அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 7-ந் தேதி கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 33 துறைகளின் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.கொரோனா பரவல் 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது.

இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், தங்கள் துறையின் நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். பல எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், அமைச்சர்களாக இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு, அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளவும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 64

0

0