திமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏவின் மருமகன் விபத்தில் பலி : விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பியோட்டம்..!

Author: Udayaraman
12 October 2020, 9:40 pm
Quick Share

சென்னை: திமுக போட்டி எம்எல்ஏவான கு.க செல்வத்தின் மருமகன் பூந்தமல்லி அருகே நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகவும் இருந்த கு.க.செல்வத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் நியமனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திமுக தலைமைக்கு எதிரான நடவடிக்கையால் கு.க.செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு போட்டி எம்எல்ஏவாக உள்ளார். இவரின் மூத்த மகளின் கணவர் துளசிராமன் (50). இவர் குடும்பத்துடன் கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியில் வசித்து வந்தார். வளசரவாக்கத்தில் உள்ள பிரபல பிளைவுட் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது மகள் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மருத்துவமனையில் மருத்துவம் பயில்கிறார். அங்கேயே தங்கிப் படித்து வருகிறார்.

துளசிராமன் தனது மகளைக் கல்லூரிக்குச் சென்று பார்த்து வருவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கல்லூரியில் படிக்கும் மகளைப் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துளசிராமன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் படுகாயமடைந்த துளசிராமன் படுகாயமடைந்து துடிதுடித்து உள்ளார். இதைபார்த்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் உயிருக்குப் போராடிய துளசிராமனை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்து மருத்துவமனைக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். அதில், அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது. மேலும் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே துளசிராமன் உயிரிழந்துள்ளார். விபத்து எந்த இடத்தில் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துளசிராமன் மீது மோதிய வாகனம் எது என்பதை அறிய இருசக்கர வாகனத்தைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் வாகனம் கிடக்கலாம். அப்படிக் கண்டறியும் பட்சத்தில் அங்கு சிசிடிவி காட்சிகள் எதுவும் சிக்குகிறதா என்றும் விசாரிக்க உள்ளனர்.

துளசிராமனை மருத்துவமனையில் அனுமதித்தது விபத்தை ஏற்படுத்தியவர்களா? அல்லது பொதுவான நபர் அனுமதித்துவிட்டு வழக்குக்குப் பயந்து சென்றுவிட்டாரா என்பதை அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த தகவல், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திக் கண்டறிய உள்ளனர்.

Views: - 41

0

0