குடோனுக்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க நவீன டிரோன் மற்றும் கேமராக்கள் : தீவிர முயற்சியில் வனத்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2022, 7:03 pm
கோவை: கோவையில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் சுற்றி வளைத்த நிலையில் சிறுத்தையை டிரோன் மற்றும் இரவு நேர காமிரா கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக ஏற்கனவே புகார் இருந்தது. இதன் தொடர்ச்சியாக சிறுத்தையால் நாய்கள் தாக்கப்பட்டு இருந்தது.
வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் குனியமுத்தூர் பி.கே புதூர் பகுதியில் உள்ள பழைய குடோனில் நேற்று சிறுத்தையை கண்டதாக அப்பகுதியில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த குடோன் ஊழியர் குடோன் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குடோன் ஊழியர்கள் சிறுத்தை இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள குடோனை மூடி சென்றனர். தொடர்ந்து குனியமுத்தூர் காவல்துறை மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித் துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல சிறுத்தையை பிடிப்பதற்காக குடோன் அருகே 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வலைவிரித்தும் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தையை பொறுமையாக காத்திருந்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ள நிலையில், அதன் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இரவு நேரத்தில் சாதாரண காமிராக்களால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் காமிராவைக் கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்
0
0