நோய் வாய்ப்பட்டு மூக்குத்தி மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த பெண் யானை : வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!

22 June 2021, 3:58 pm
kumari elephant - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பூதப்பாண்டி அருகே மூக்குத்தி மலைப்பகுதியில் நோய்வாயால் பாதிக்கப்பட்டு, சுற்றித் திரிந்த பெண் காட்டு யானைக்கு வனத்துறையின் கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை உடையார் கோணம் பகுதியில் வாழைத் தோட்டம் மற்றும் தென்னை தோப்புகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

இதனை அடுத்து அந்த யானையை விரட்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். மேலும் அந்த யானை மீண்டும் அந்த பகுதியில் புகாதவாறு அகழி வெட்டப்பட்டது. பின்னர் அந்த யானை திடல், இரத்தினபுரம், தோவாளை சானல் மேல்புறம் உள்ள மூக்குத்தி மலைப்பகுதியில் உள்ள தோப்பு வெளியில் சுற்றித் திரிந்தது.

அழகியபாண்டியபுரம் வனச்சரக மணிமாறன் தலைமையில் வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்தனர். அப்போது யானையின் உடலில் ஒரு பகுதியில் புண் ஏற்பட்டு அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த யானை அறுபது வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மண்டல வனத்துறை கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து அந்த யானையை கண்காணித்தனர்.

பின்னர் நேற்று திருநெல்வேலி மாவட்ட வன கால்நடை மருத்துவப் பிரிவு டாக்டர். மனோகரன், பேராசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் தேனி மாவட்ட வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ஓசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினரும் மற்றும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு உலாவிக் கொண்டிருந்த யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். மயக்கமான யானையை பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த யானையின் பிறப்பு உறுப்பு பகுதி மற்றும் வாய் பகுதியில் புண்கள் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த யானைக்கு மருந்துகள் போட்டு சுத்தப்படுத்தி, ஊசிகள் போடப்பட்டது. மேலும் யானை மயக்கம் தெளிந்தவுடன் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Views: - 296

0

0