கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு மோசடி: 10 பேர் கும்பல் சிக்கியது
Author: kavin kumar9 October 2021, 7:58 pm
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்த பத்து பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4.66 கோடி கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியில் உணவகம் அருகே 10 பேர் கொண்ட கும்பல் தங்களது ஐந்து கார்களை நிறுத்தி விட்டு நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கார்கள் மூலமாக கிருஷ்ணகிரி நகரை சுற்றி வருவதும் பிறகு அதே பகுதியில் நின்று பேசிக் கொள்வதும் என தொடர்ச்சியாக மூன்று முறை நகரை அவ்வப்போது சுற்றி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அதிகரிக்கவே குற்றப்பிரிவு போலீசார் அந்த 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தனர்.பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்ததால் இந்த 10 நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர்கள் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகி, ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், ஈரோடு மாவட்டம் முருகேசன், காவேரிபட்டினம் நாகராஜ், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷ் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் 10 பேரும் கிருஷ்ணகிரி நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சென்று சோதனை செய்தபோது பல்வேறு நபர்களிடம் பணம் பெறப்பட்டது தொடர்பான ஆவணங்கள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தபோது பணம் இரட்டிப்பு செய்து தருவது தொடர்பாகவும் மக்களின் ஆசையை தூண்டும் வகையில் 2000 ரூபாய் நோட்டுகளை வீடியோவாக பதிவு செய்தும் வைத்திருந்தனர்.
இதனை அடுத்து ராயக்கோட்டை சேர்ந்த சங்கரின் வீட்டில் போலீசார் சென்று சோதனை நடத்தினர் அந்த சோதனையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 4 கோடியே 66 லட்சம் டம்மி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இவர்கள் பயன்படுத்திய ஐந்து கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இவர்களுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணகிரியில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை இரட்டிப்பு செய்து 2 கோடியாக தருவதாக வாக்குறுதி கொடுத்து ஒருவரை ஏமாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள இந்த கும்பலின் முக்கிய நபர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
0
0